ஆன்மிகம்

சேலத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்! 

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் கடந்த 78- வது சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். அதேபோன்று, இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கு குறைந்தபட்ச வயது இல்லை. முன்னாள் படைவீரர்களின் 25 வயது வரை திருமணமாகாத மகன், மகள், விதவை மகள் மற்றும் போரில் மரணமடைந்த முன்னாள் படைவீரர்களின் துணைவியருக்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். 

அனைத்து தரப்பினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. இதுபோன்ற முக்கிய அம்சங்களுடன் முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, பயனாளிகள் தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான தேர்வுக் குழு மூலம் நடைபெறும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, சென்னை கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் 10 நாள் பயிற்சி அளிக்கப்படும். 
எனவே. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.