ட்ரெண்டிங்

அரசாணைகளை செயல்படுத்தும் அதிகாரம் அரசு அலுவலர்களிடம் மட்டுமே! 


தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய துணைத்தலைவர் இமயம் வெ.அண்ணாமலை தலைமையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் இன்று (மார்ச் 20) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய துணைத்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் அமைக்கப்பட்டு முழுநேர ஆணையமாக செயல்பட்டு வருகிறது. 

இன்றையதினம் நடத்தப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக சென்று சேர்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம், கிராம முன்னோடித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் பெறப்படும் புகார் மனுக்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் குறித்தும், சமூகத்தில் சாதியக்கொடுமைகள் மற்றும் அதன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் தொடர்புடைய வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும், பொதுமக்கள் வழங்கியுள்ள மனுக்களுக்கு ஒருவார காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
குறிப்பாக, சாதி ரீதியான குற்றங்கள் நடைபெறாதவாறு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும். பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் ஊராட்சிமன்றத் தலைவராக இருக்கும் ஊராட்சிகளில் உள்ள பாகுபாடுகள் குறித்தும், புகார் மனுக்கள் பெறப்படும்போது உரிய சட்டவிதிகளின்படி வழக்குப்பதிவு செய்து தீருதவித்தொகை உரிய காலத்தில் பெற்று வழங்குவது குறித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளை கையாளுவது குறித்தும், சாதிச்சான்று வழங்குவதில் உள்ள கால தாமதம் மற்றும் மானுடவியல் ஆய்வறிக்கை குறித்தும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலம், வீட்டுமனை தொடர்பாக ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டைத் திகழச் செய்யும் நோக்கோடு செயலாற்றி வருகிறார். அவர்களின் நோக்கத்திற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். குறிப்பாக, அரசால் அரசாணைகள் வெளியிடப்பட்டாலும் முறையாக அதனைச் செயல்படுத்தும் அதிகாரம் அரசு அலுவலர்களிடம் மட்டுமே உள்ளது. எனவே, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வுகாண அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய துணைத்தலைவர் இமயம் வெ. அண்ணாமலை தெரிவித்தார். 

இன்றையதினம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மூலமாக 53 பயனாளிகளுக்கு ரூபாய் 60.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு பணி நியமன ஆணையினையும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய துணைத்தலைவர் இமயம் வெ.அண்ணாமலை வழங்கினார்.