ட்ரெண்டிங்

வாகன சோதனை- மாவட்ட ஆட்சியர் விடிய விடிய ஆய்வு! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுவருவதை மாவட்டத் தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., நேற்றைய தினம் (ஏப்ரல் 03) இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 2 வீடியோ பார்வை குழு, 1 வீடியோ கண்காணிப்பு குழு, 1 கணக்கு சரிபார்ப்பு குழு என 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 22 வீடியோ பார்வை குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 11 கணக்கு சரிபார்ப்பு குழுக்கள், 11 உதவி செலவின மேற்பார்வைக்குழுக்களும் ஏற்கனவே நியமிக்கப்பட்டு GPS கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அலுவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் (ஏப்ரல் 03) வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இரவு முழுவதும் சூரமங்கலம் இரும்பாலை சாலை, தாரமங்கலம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதியில் நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படைகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருவதை ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக சூரமங்கலம் பகுதியில் நடைபெற்ற ஆய்வின் போது ரூபாய் 1 லட்சம் பணத்துடன் உரிய ஆவணங்கள் இன்றி அவ்வழியே வந்த நபர் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தினை நிலையான கண்காணிப்புக்குழுவினர் மூலம் பறிமுதல் செய்து. கருவூலத்தில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் (ஏப்ரல் 03) வரை நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையின் மூலம் ரூபாய் 1,88,99,588 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இப்பணியினை தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் அலுவலர்கள் இதற்குரிய அறிக்கையினை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.