ட்ரெண்டிங்

இயற்கை எரிவாயு- 2-ம் கட்டமாக சூரமங்கலத்தில் வழங்க ஏற்பாடு! 

சேலம் இரும்பாலை பகுதியில் 5 கிராம பஞ்சாயத்துகளில் 1,035 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை வழங்கி பெண்கள் சமையல் செய்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக சூரமங்கலம், ஜாகீர் அம்மாப்பாளையம் பகுதியில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் கடந்த 2018- ஆம் ஆண்டு நகர இயற்கை எரிவாயு விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. ரூபாய் 1,300 கோடியில் துவங்கிய இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 3.35 லட்சம் வீடுகளுக்கும் 158 பெட்ரோல் பங்க்குகளுக்கும் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக சேலம் இரும்பாலை சாமுண்டி நகரில் இயற்கை எரிவாயு பிளாண்ட் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சேலம் இரும்பாலை வளாகத்தில் உள்ள மோகன் நகரில் 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கி விநியோகத்தைத் தொடங்கினர். 

பாகல்பட்டி, மாரமங்கலத்துப்பட்டி, இரும்பாலை, ஜாகீர் அம்மாப்பாளையம், சூரமங்கலம், சர்க்கார் கொல்லப்பட்டி, சங்கர் நகர், திருவாக்கவுண்டனூர், முல்லை நகர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட விநியோக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை வழங்க சுமார் 3,000 வீடுகளில் குழாய் இணைப்புடன் கூடிய மீட்டர் பொருத்தியுள்ளனர். 

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், 5 கிராம பஞ்சாயத்துக்களில் 1,035 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை வழங்கிவிட்டோம்; இதையடுத்து, சூரமங்கலம், ஜாகீர் அம்மாப்பாளையத்தில் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கு சப்ளை மேற்கொள்ள இருக்கிறோம். சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி, குகை, அஸ்தம்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட மற்ற இடங்களில் புதிய விநியோக குழாய்கள் பதிக்கும் பணியும் வீடுகளில் இணைப்புடன் கூடிய மீட்டர் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றனர்.