சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (மார்ச் 18) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்து இன்றைய தினம் ஆத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூபாய் 153.22 கோடி மதிப்பீட்டிலான 4,814 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 3,845 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 969 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், இராமநாயக்கன்பாளையம் இன்றையதினம் ஊராட்சியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம். அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய் 10.80 லட்சம் மதிப்பீட்டில் காமராசர் நகர் முதல் இராமநாயக்கன்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், காமராசர் நகர் பகுதியில் செயல்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு முறையாக சுத்திகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 8.58 லட்சம் மதிப்பீட்டில் காமராசர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், இராமநாயக்கன்பாளையத்தில் தலா ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம், துளுக்கனூர் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அப்பமசமுத்திரத்தில் ரூ.13.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடை கட்டடத்தினையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.58 கோடி மதிப்பீட்டில் நரசிங்கபுரம் அப்பமசமுத்திரம் முதல் சிவகங்கைபுரம் வரை அப்பமசமுத்திரம், இராமநாதபுரம் மலையடிவாரம், ஏகேஜி நகர் வழியாக அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணியினையும், பொது நூலகத்துறையின் சார்பில் தென்னங்குடிபாளையத்தில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் நூலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் துளுக்கனூர் ஊராட்சியில் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூபாய் 9.98 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


