ட்ரெண்டிங்

போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!

சேலம் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மார்ச் 17) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் உடல்நிலை, உளவியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 122 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டங்களும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. 

போதைப்பொருட்களின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் 225 இடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் 260 வாகனங்கள் மற்றும் 406 கடைகளிலும், 586 கல்வி நிறுவனங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 3.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

போதைப் பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.கதிரவன், உதவி ஆணையர் (கலால்) (பொ) ஜெயக்குமார். மாநகர் நல அலுவலர் மரு.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.