ட்ரெண்டிங்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்! 

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அரசு அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மார்ச் 17) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

அந்தவகையில், இன்றைய தினம் நடைபெற்ற குடிநீர் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவரும் குடிநீரின் அளவு மற்றும் எந்தெந்த பகுதிகளில் இனிவரும் நாட்களில் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தற்பொழுது, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 193.793 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. 
குறிப்பாக, கடந்த வாரம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு குடிநீரைத் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திடத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. 

குறிப்பாக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை பணி மற்றும் கால்வாய் பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்போது குடிநீர் குழாய்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும், குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொன்மணி, மாநகரப் பொறியாளர் (பொ) செந்தில்குமார், மாநகர் நல அலுவலர் மரு.முரளி, மாநகராட்சி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.