சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மார்ச் 15) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் ஊரகப் பகுதிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டது. முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகள் குறித்தும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவது குறித்தும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கும் பணிகள் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீடுகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்தும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் புதிய வகுப்பறைக் கட்டடப் பணிகள் குறித்தும், தூய்மை இந்தியா திட்டம் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 429 வீடுகளும், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 379 வீடுகளும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 335 வீடுகளும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு 279 வீடுகளும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வீடுகள் என மொத்தமுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 3,500 வீடுகள் கட்டுவதற்கு 2024 -25 ஆம் நிதி ஆண்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேற்கண்ட அனைத்துப்பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.
மேலும், பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 19 வீடுகளும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 வீடுகளும், கொளத்தூரில் 7 வீடுகளும் அயோத்தியாப்பட்டணத்தில் 4 வீடுகளும், வாழப்பாடி மற்றும் காடையாம்பட்டியில் தலா 1 வீடுகள் என மொத்தம் 55 வீடுகள் கட்டித் தருவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் அனைத்தும் முடிவுறும் நிலையில் உள்ளது.
மேலும், அனைத்து கிராமங்களும் சமூக பொருளாதார வளர்ச்சியினை முழுமையாக அடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடர்புடைய அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குள் முடித்திட அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொன்மணி, உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) உமா நந்தினி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


