ட்ரெண்டிங்

சொத்தை எழுதி வாங்கி வீதியில் விட்ட மகள்கள்....ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை! 

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காளிப்பட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. 68 வயதான முதியவர் இவருக்கு 3 பெண் பிள்ளைகள், 2 மகன்கள் என 5 பேர் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமாக 2,600 சதுரஅடி நிலம் பஞ்சுகாளிப்பட்டியில் இருந்தது

இவரது மகள்களான சுந்தரி, சீதா இருவரும் தந்தை சின்னதம்பியைப் பார்த்துக் கொள்வதாகவும், ஆசை வார்த்தைக் கூறியுள்ளனர். நல்ல முறையில் அவரை பராமரித்து வந்த நிலையில் அவரது பெயரில் இருந்த நிலத்தை தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் கடந்த 2021- ஆம் ஆண்டு அவரது இரு மகள்கள் எழுதி வாங்கியுள்ளனர். 

நாட்கள் செல்ல செல்ல மகள்கள் இருவரும் தந்தையான சின்னத்தம்பியை கவனித்துக் கொள்ளாமல் உணவு கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 மகள்களும் இவரை சாலையில் விட்டு சென்றதாகவும், தொடர்ந்து இவரது மகன்கள், மற்றொரு மகள் மட்டுமே தந்தையை பார்த்து வருகின்றனர்

இந்த நிலையில், ஏமாற்றி எழுதிக் கொண்ட பத்திரபதிவை ரத்து செய்ய கோரி இன்று (நவ.11) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சின்னத்தம்பி வீல் சேரில் வந்தார். தொடர்ந்து அவரால் பேச முடியாமலும் நடக்க முடியாமலும் இருந்த நிலையில் வீல் சேரில் சென்று தனக்கு சொந்தமான சொத்தை மீட்டு தர வேண்டும், பத்திரபதிவு ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.

பெற்ற தந்தையை 2 மகள்களும் சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீதியில் விட்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.