சேலம் மாநகரில் சேகரமாகும் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் 33 இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் இருந்து இலவசமாக உரத்தை விவசாயிகள், மாடித் தோட்டம் வைத்துள்ளவர்கள் பெறலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகராட்சியைக் குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் வீடு தோறும் வாகனம் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குப்பையில் உரம் தயாரிப்பை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார்டுக்கும் நுண்ணுயிரி உரம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் நுண்ணுயிரி உரம், காய்கறி, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இயற்கையான உரமாகக் கிடைக்கிறது. தயாரிக்கப்படும் உரம் இலவசமாக விவசாயிகளுக்கும், மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நுண்ணுயிரி உரத்தை விரும்பிக் கேட்டு அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
உரம் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார், பட்டாவுடன் சுகாதார அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தால் தேவையான உரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மாடித் தோட்டம் வைத்துள்ளவர்களும் அதற்கான ஆவணங்களை வைத்து விண்ணப்பித்தால் உரத்தைப் பெறலாம். தற்போது மையத்தில் 650 டன் உரம் கையிருப்பில் உள்ளன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுக்கும் மையம் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மெய்யனூர் மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்ற மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.



