ட்ரெண்டிங்

ஆடுகளை திருடி சென்ற காரை மடக்கி பிடித்து அசத்திய காவல்துறை! 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் ரவி (வயது 51). இவரது  வீட்டில் இருந்த 2 ஆடுகளை இன்று அதிகாலை 03.20 மணியளவில் ஆம்னி காரில் வந்த இருவர் காரில் ஏற்றிச் செல்ல முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த ரவி, ஆடு திருடிய காரை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். அப்போது அந்த கார் சந்தை ரோடு வழியாக தப்பிச் செல்வதை அறிந்து, துரிதமாக யோசித்து தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் செல்லும் பாதையை அறிந்த காவல்துறையினர், சாலையின் குறுக்கே டிராக்டர் ஒன்றை நிறுத்தி அதிவேகமாக வந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பியோடினார். காரை ஓட்டி வந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் நாமக்கல் மாவட்டம், சின்னச்செக்கடி ஊனந்தாங்கலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 23) என்பதும், தப்பியோடியவர், கொல்லிமலை, மேலூர் பூங்காப்பட்டியைச் சேர்ந்த குமார் (வயது 39) என்பதும் தெரிய வந்தது. அதையடுத்து, பன்னீர்செல்வத்தை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடி காட்டில் பதுங்கியிருந்த குமாரை, இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான காவல்துறையினர் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு ஆடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.