ட்ரெண்டிங்

சேலத்தில் மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரித்து போராட்டம்! 

சேலத்தில் மத்திய அமைச்சரின் உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 10) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது. மக்களவையில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை, பி.எம்.ஸ்ரீ திட்ட நிதி உள்ளிட்டவை தொடர்பாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். 

இதற்கு மக்களவையில் பதிலளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழ்நாடு அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்.

இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை தி.மு.க. தவறாக வழி நடத்துகிறது. சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்டு கையெழுத்திட மறுத்தனர். சூப்பர் முதல்வர் யார்? என்று கேள்வி எழுப்பி, தமிழக எம்.பி.க்களையும், தமிழக மக்களையும் நாகரீகமற்றவர்கள்" என்று குறிப்பிட்டார். 

இதற்கு தி.மு.க. மட்டுமின்றி கூட்டணி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. 

அப்போது பேசிய கனிமொழி எம்.பி., தமிழக எம்.பி.க்களையும், தமிழக மக்களையும் நாகரீகமற்றவர்கள் என அமைச்சர் கூரியத்தில் வேதனை. மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இதனிடையே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகரீகமற்றவர்கள் என்ற எனது பேச்சை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். மும்மொழியில் தமிழக அரசுக்கு புரிதல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சரின் பேச்சைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மத்திய அமைச்சரின் உருவபொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.