தமிழகத்தில் 30 இடங்களில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில் சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது, 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் ஆவினில் தற்போது 5.55 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தினமும் உள்ளூர் தேவைக்கு 2.50 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்கு 2.25 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டு வருகிறது. மீதியுள்ள பாலை பால் பவுடராக தயாரிக்கப்பட்டும், நெய், இனிப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே, சேலம் ஆவினில் இருந்து சென்னை அடையாறில் உள்ள இந்திய கடற்படைக்கு 8,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான பணியில் பால் பண்ணை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சிங்கப்பூருக்கு 20,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் கண்டெய்னரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 10,000 லிட்டர் பால் சென்னை அடையாறில் உள்ள கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை அளித்துள்ளார். பால் வளத்துறை அமைச்சர் அறிவுரையின் பேரிலும், பால்வளத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலின் படியும் அரசு வழங்கி வரும் பல்வேறு சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.


