ட்ரெண்டிங்

வேளாண் பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார். வேளாண் துறைக்கு சுமார் 44,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


வேளாண் பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்! 


பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம் உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளை தானியங்கி மயமாக்க ரூபாய் 3.6 கோடி ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூபாய் 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூபாய் 20.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2023- 2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றிற்கு ரூபாய் 215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வீட்டுத் தோட்டத்தில் பழங்கள், காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்க வாழை, முருங்கை செடிகள் வழங்கப்படும். பப்பாளி, கறிவேப்பிலை போன்ற செடிகள் வழங்க ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய விதை விநியோகிக்கப்படும். 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேம்பினை பரவலாக்க 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும். 

மண்ணுயிர் காப்போம் என்ற திட்டம் ரூபாய் 206 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும். மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்; 2 லட்சம் ஏக்கரில் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 206 கோடியில் திட்டம் தொடங்கப்படும்.

10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 127 லட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானிய உற்பத்தியை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயிர் பரப்பு 2022- 2023 ஆம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்க ரூபாய் ரூபாய் 1,775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூபாய் 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க நிதி ரூபாய் 65.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணிகளுக்காக ரூபாய் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.