சேலம் மாவட்டத்தில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் வசூல் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மார்ச் 10) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் 2020-21ஆம் நிதியாண்டிற்கான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ.1,370.33 கோடியும், 2021-22-ஆம் நிதியாண்டிற்கான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ.1,342.26 கோடியும், 2022-23 ஆம் நிதியாண்டிற்கான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ.1,784.99 கோடியும், 2023-2024 ஆம் நிதியாண்டில் ரூ.2,287 கோடியும் மற்றும் நடப்பு 2024-2025 ஆம் நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ.2,317.41 கோடி என மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.9,101.99 கோடி வசூல் சாதனையை சேலம் மாவட்டம் எய்தியுள்ளது.
இதில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களின் சேவை மிகவும் இன்றியமையாததாகும். படித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் மற்றும் ஆண்கள் சுய வேலைவாய்ப்பாக அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் பணியினை செய்து வருகின்றனர். தற்பொழுது 2023-2024-ஆம் நிதியாண்டில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு தற்பொழுது பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலுமணி என்ற சிறுசேமிப்பு முகவர் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ.73,83,39,200 வசூல் சாதனை செய்து, தொடர்ந்து 5 வருடங்களாக மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
கருப்பூரைச்சேர்ந்த கோவிந்தசாமி என்ற சிறுசேமிப்பு முகவர் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ.23,10,58,000 வசூல் சாதனை செய்து தொடர்ந்து வருடங்களாக மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் மாவட்ட அளவில் மாநகராட்சி மண்டல அளவில், நகராட்சி அளவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக அளவு வசூல் சாதனை புரிந்த அனைத்து சிறுசேமிப்பு முகவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு நாட்டிற்கு மட்டுமல்லாது வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பயன்படுகிறது. எனவே, அஞ்சலக சிறுசேமிப்பின் அவசியத்தினையும், பயன்களையும் பொதுமக்களுக்கு சிறுசேமிப்பு முகவர்கள் எடுத்துச் சொல்லி சிறப்பாக இத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாகவும், இனிமையானதாகவும் அமைந்திட பெற்றோர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிப்பதோடு தங்கள் பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை உணர்த்திடும் வகையில் சேமிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தி சிக்கனம் என்னும் அடித்தளத்தின் மீதே சேமிப்பு எனும் கட்டடத்தை எழுப்ப இயலும் என்பதை உணர்த்திட வேண்டும்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பாடுபட்டு உழைத்து சேமித்த, தங்கள் வருமானத்தை சிட்பண்டு, தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான அஞ்சலகங்களில் தங்களுக்கேற்ற சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)