ட்ரெண்டிங்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 

தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 12- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். 

அதன்படி, www.results.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளப் பக்கங்களுக்கு மாணவ, மாணவிகள் சென்று பதிவெண், பிறந்ததேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவுச் செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட்டன. 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7.60 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் அதில் 94.56% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.44% மாணவிகளும், 92.37% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.07% மாணவிகள் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு, தனியார் என மொத்தமாக 2,478 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளனர். 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.53% மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.