ட்ரெண்டிங்

நம்மை மாற்றக்கூடிய சொல் இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறது- பேராசிரியர் பர்வீன் சுல்தானா

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி இன்று (அக்.05) பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏ.வி.எஸ் கல்லூரி, கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சோனா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 2,500 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் மத்தியில் பேசிய பேராசிரியர் பர்வீன் சுல்தானா, "மனிதன் வளர்ச்சிக்கு ஏற்ப மனிதநேயத்தையும் வளர்ப்பது மாபெரும் தமிழ்க் கனவு நோக்கங்களில் ஒன்றாகும். குறிப்பாக, எந்த புத்தகத்தில் உள்ள சொல் நம் வாழ்க்கையை மாற்றும் என்று தெரியாது. எவ்வளவு விரைவாக அந்த சொல் நம்மிடம் வந்து சேர்கின்றதோ அவ்வளவு விரைவாக நமது வாழ்க்கை மாறுகிறது. நம்மை மாற்றக்கூடிய சொல் இங்கே தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. கவனம் இல்லாத காரணத்தால் அது நம்முடைய வாழ்க்கையில் வந்து சேருவதில்லை. கவனம் பெற்று அமர்ந்திருக்கும்போது அந்த சொல் ஒரு சுற்று, சுற்றிவிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. காலத்திலே அந்த சொல் வந்து சேர்கின்ற போதுதான் வாழ்க்கை சில உன்னதங்களை அடைகிறது.

 

பல இடங்களில் மற்றவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குநரான ப. வீர முத்துவேல் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதுபோன்ற நம்மைச் சுற்றி நடக்கும் பல் விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

மனிதன் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவ்வாறு மனிதனுடைய வளர்ச்சியுடன் சேர்ந்து மனிதத்தையும் வளர்ப்பது தான் மாபெரும் தமிழ்க்கனவு. கல்லூரிக்கு வருவது மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டும் அல்ல, வாழ்க்கையில் நாம் என்னவாக வர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் மிகவும் முக்கியமாகும். மகிழ்ச்சியோடும், வரலாற்றுச் சிறப்பு: மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

 

கல்லூரி காலத்தினை மிகவும் அழகாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வாழ்க்கையில் சம்பாதிப்பதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில விஷயங்களை சாதிக்க வேண்டும் என்றால் சில மன உளைச்சலான சிக்கல்களில் ஈடுபட வேண்டாம்." இவ்வாறு பேராசிரியர் பர்வீன் சுல்தானா தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியின் நிறைவில் மாணவ, மாணவிகள் சிறப்பு விருந்தினரிடம் தங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கான பல்வேறு சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுப் பெற்றனர். சிறந்த கேள்விகளைக் கேட்ட மற்றும் சிறப்பாகக் கருத்துரையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.