சேலத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் நீதிமன்றம் ரூபாய் 6.36 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 10) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தற்போது 32 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான நீதிமன்றமும் இயங்கி வருகிறது. மிகவும் பழமையான கட்டிடமாக இருந்தாலும் அதன் உறுதித்தன்மை மாறாமல் இருந்தது. இந்த கட்டிடம் சுண்ணாம்பு, கருப்பட்டி கடுக்காய், கோழி முட்டை ஆகிய கலவைகள் மூலம் கட்டப்பட்டிருந்தது. எந்நேரமும் குளிர்ச்சியுடன் இருக்கும். இதையடுத்து இந்த கட்டிடத்தை பராமரிக்க சென்னை நீதிமன்றம் முடிவு செய்தது. தொல்லியல்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து இந்த நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம், அத்தியாவசிய பண்டங்கள், போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம் ஆகியவறை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2020- ஆம் ஆண்டு இந்த நீதிமன்ற கட்டிடத்தை புனரமைக்க ரூபாய் 6.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சுண்ணாம்பு, கருப்பட்டி கோழிமுட்டை, கடுக்காய், ஆற்றுமணல் மூலம் சீரமைப்பு பணிகள் நடந்தது.
இப்பணிகளை மேற்கொள்ள நெல்லை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.மேலும் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் பதிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த பணிகள் தற்போது முடிவடைந்தது.புதுப்பிக்கப்பட்ட இந்த நீதிமன்றம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக தொழிலாளர் நீதிமன்றம், அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருட்கள் சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கும் என மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்ப மணி கூறுகையில், இந்தியாவிலேயே முதன்முதலாக சேலத்தில்தான் மாவட்ட நீதிமன்றத்தை பிரிட்டீசார் கட்டினர். இந்த நீதிமன்றம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமர்ந்து நீதிமன்ற பணியை பார்க்கும் வகையில் பர்மா தேக்கால் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்நீதிமன்றத்தை சேலத்தின் நினைவு சின்னமாக பார்க்கலாம். சிறுதிருத்தம் கூட இல்லாமல் சீரமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூண்களும் பிரமாண்டமாக உள்ளது என்றார்.



