ட்ரெண்டிங்

5,000 பேரிடம் மோசடி செய்தது அம்பலம்!

 

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்துத் தருவதாக சுமார் 5,000 பேரிடம் மோசடி செய்து இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் அறக்கட்டளை நிர்வாகிகளைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவுச் செய்துள்ளனர். 

 

சேலம் அம்மாப்பேட்டையில் சிவகாமி திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை இயங்கி வந்தது. இதனை வேலூரைச் சேர்ந்த விஜயாபானு உள்ளிட்ட சிலர் நடத்தி வந்தனர். இவர்களது அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி மற்றும் இரட்டிப்புத் தொகை தருவதாக அறிவித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் நம்பி ரூபாய் 50,000 முதல் ரூபாய் 10 லட்சம் வரை முதலீடு செய்தனர். 

 

அங்கீகாரம் இல்லாமல் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு வந்த தகவலை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று செய்தன செய்தனர். அப்போது கட்டுக்கட்டாக குப்பைப்போல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 12 கோடியே 65 லட்சம், 2.5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

அந்த பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் அனைத்தும் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுமார் ரூபாய் 500 கோடிக்கு மோசடி நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

 

இந்த மோசடி தொடர்பாகவும் சோதனையிட வந்த காவல்துறையினரைத் தாக்கியதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் அறக்கட்டளை தலைவர் விஜயாபானு, நிர்வாகிகள் ஜெயப்பிரதா, பாஸ்கர், சையத் முகமது உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அறக்கட்டளைக்கு பணம் வசூலித்து கொடுத்த ஏஜெண்டுகள் விவரத்தை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த நிலையில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை மூலம் சேலம் மட்டுமின்றி வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள ஏராளமானோரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்திருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இதுவரை சுமார் 5,000 பேரிடம் பணம் இரட்டிப்பு தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் அம்பலமாகியுள்ளது. 

 

இதையடுத்து, காவல்துறையினர் அறக்கட்டளை நிர்வாகிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களது வீடுகள் உள்பட சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.