ட்ரெண்டிங்

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை! 

பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஆகஸ்ட் 31) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களுடன் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த பருவமழையின்போது நீரினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தனிகவனம் மேற்கொண்டு வடிகால் அமைப்புகள் முழுமையாக செயல்படுவதைத் தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்வரத்து மற்றும் வெளிச்செல்லும் வாய்க்கால்கள் மற்றும் வரத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் குறிப்பிட்ட நாள் இடைவெளிகளில் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை, அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துறை அலுவலர்கள் ஒவ்வொரு வாரமும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்திட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பருவமழை காலங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்வதை உறுதி செய்யும் வகையில் மின்தடப்பாதைகளில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை பாதுகாப்பாக வெட்டி அகற்றிட வேண்டுமெனவும். மழையினால் சாலைகளில் ஏதேனும் பள்ளங்கள் ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமெனவும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும், டெங்கு கொசுக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளைச்சுற்றி உருவாகாத வண்ணம் பார்த்துகொள்ளுதல் உள்ளிட்ட பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளவும். உள்ளாட்சி அமைப்புகள் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாதவண்ணம் தங்கள் பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்புப்பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றுவதுடன் தங்கள் துறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டப் பணிகளை உரிய கால அளவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.