சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 5- வது முல்லைவாடி இளங்கோ நகர் பகுதியில் உள்ள வசிஷ்ட நதி வடக்கு கரையோரத்தின் அருகே சாக்கடை கழிவுநீரில் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் உடல் மிதப்பதாக இன்று (ஜன.25) அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினருடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பெண் சிசுவின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். மேலும், பெண் சிசுவை சாக்கடை கழிவுநீரில் யாராவது வீசி சென்றார்களா?, இந்த பகுதிக்கு யார் யார் வந்து சென்றார்கள்? போன்றவை குறித்து ஆத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் சிசுவின் உடல் கழிவுநீரில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



