சேலம் முள்ளுவாடி 2-வது கேட்டில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக சாலையோரம் இருக்கும் மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம்- விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில் தினசரி 8 பயணிகள் ரயில்களும், இதுதவிர சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் வரும் போது சத்திரம், முள்ளுவாடி கேட் 1- வது மற்றும் 2- வது கேட் அணைமேடு, தில்லைநகர், பொன்னம்மாப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் ரயில்வே கேட் மூடப்படும். இவ்வாறு கேட்டுகள் மூடப்படும் போது அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
எனவே, இந்த வழித்தடத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியின், பல அமைப்பினர், வாகன ஓட்டிகள் அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சத்திரம், முள்ளுவாடி 1- வது மற்றும் 2- வது கேட், அணைமேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சத்திரம் மற்றும் முள்ளுவாடி 1- வது கேட்டில் கடந்த 2016- ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.
சத்திரத்தில் மேம்பாலப்பணிகள் முடிந்து கடந்த 2020- ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. முள்ளுவாடி 1- வது கேட்டில் கடந்தாண்டு டிசம்பர் 19- ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பாலத்தை திறந்து வைத்தார். முள்ளுவாடி 2- வது கேட்டில் மேம்பாலப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக மாநகராட்சி தொங்கும் பூங்காவில் இருந்து பிரட்ஸ் ரோட்டில் கால்நடை மருத்துவமனை வரை கட்டிடங்கள் இடிக்கும் பணி கடந்த சில மாதமாக நடைபெற்றது.
மேம்பாலப் பணி இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்கப்படவுள்ளதால் சாலையோரமுள்ள மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)