ட்ரெண்டிங்

பெண் எஸ்.ஐ. உள்பட 10 பேர் பணியிட மாற்றம்!

 

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையை சரிவர மேற்கொள்ளாத பெண் எஸ்.ஐ., 3 சிறப்பு எஸ்.ஐ.க்கள் உள்பட 10 போலீசாரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. கெளதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். 

 

பொங்கல் பண்டிகை முடிந்து நகரப் பகுதிகளுக்கு மக்கள் திரும்பும் நிலையில், குற்றச்சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நேற்று முன்தினம் (ஜன.18) முதல் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையை அதிகளவு நடத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையை நடத்தினர். நள்ளிரவு 12.00 மணி வரை இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. 

 

சேலம் மாவட்டத்தில் சேலம் ரூரல், ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய 6 கோட்டங்களிலும் அந்தந்த டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் வாகன சோதனையைத் தீவிரமாக மேற்கொள்ள சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. கௌதம் கோயல் உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று முன்தினம் மதியம் 01.00 மணி முதல் நள்ளிரவு 01.00 மணி வரையில் தொடர்ந்து முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனையை போலீசார் நடத்தினர். 

 

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியிலும் 5- க்கும் மேற்பட்ட இடங்கள் என ஒட்டுமொத்தமாக 100- க்கும் அதிகமான இடங்களில் இச்சோதனையை போலீசார் நடத்தினர். இந்த வாகன சோதனையை போலீசார் சரிவர மேற்கொள்கிறார்களா? என எஸ்.பி.கௌதம் கோயல் நேரில் ஆய்வு செய்தார். 

 

ஆய்வில் சரிவர வாகன சோதனையை மேற்கொள்ளாத மகுடஞ்சாவடி எஸ்.ஐ. ஜீவிதா, நங்கவள்ளி சிறப்பு எஸ்.ஐ.சின்னப்பன், ஆத்தூர் ரூரல் வீரகனூரைச் சேர்ந்த மேலும் 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள், 6 ஏட்டுகள் என 10 பேரை அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டார். இந்த 10 போலீசாரும் உடனடியாக அந்தந்த ஸ்டேஷன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

 

எஸ்.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கை மாவட்ட போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.