ட்ரெண்டிங்

கோயிலில் பொங்கல் வைப்பதில் மோதல்.....தாக்குதல் நடத்தியவர் கைது!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோயிலில் பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய இளைஞரை காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

பாலப்பட்டுபட்டி கிராமத்தில் உள்ள ஓம் காளியம்மன் கோயிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர், பொங்கல் வைக்கச் சென்றுள்ளார். அப்போது, ராஜசேகர் என்பவர் நிலப்பிரச்சனை உள்ளதால் எங்கள் தோட்டத்தில் உள்ள கோயிலில் நீங்கள் பொங்கல் வைக்கக் கூடாது எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

 

இதற்கு கவிதா நாங்கள் பொங்கல் வைப்போம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, அங்கு வந்த கவிதாவின் தம்பி காசி ராமன் இரும்பு கம்பியால் தாக்கியதில் ராஜசேகர் மயங்கி விழுந்துள்ளார்.

 

பொதுமக்கள் அங்கு கூடிய நிலையில், கவிதாவும், தம்பி காசி ராமனும் அங்கிருந்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர், காசி ராமன் 10- க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து ஊரில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளார். இதில் பள்ளி மாணவன் உள்பட 8 பேர் காயமடைந்த நிலையில், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து விசாரணை நடத்திய ஓமலூர் காவல்துறையினர் காசி ராமனை கைது செய்தனர். இந்த சம்பவம் ஓமலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.