ட்ரெண்டிங்

மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி- சேலம் பெண் கைது!

 

மும்பையில் போலி நகைகளைக் கொடுத்து ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கி மோசடி செய்த நிலையில் சேலத்தில் பதுங்கியிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

மும்பை, நவி மும்பை போன்ற இடங்களில் உள்ள நகைக்கடைகளில் சேலத்தில் இருந்து செல்லும் சில பெண்கள், அதிகளவிலான தங்க நகைகளைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து குறைந்த அளவில் டிசைன் நகைகளை வாங்கி வருகின்றனர். அதன் பிறகு இவர்களிடம் இருந்து வாங்கிய நகைகளை கடைக்காரர்கள் சரிபார்க்கும் போது அது போலி நகை என தெரியவரும். 

 

அதற்குள் போலி நகைகளை கொடுத்து விட்டு தமிழகத்திற்கு அந்த பெண்கள் தப்பி வந்துவிடுவர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நவி மும்பை ரபேல் காவல்நிலைய எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகை கடைக்கு கடந்த நவம்பர் மாதம் சேலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் சென்றது. அங்கு இவர்கள் கொண்டு சென்ற அதிகளவிலான நகைகளை கொடுத்து விட்டு சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கியுள்ளனர். 

 

அதன்பின்னர் கொடுத்த நகைகளை பார்க்கும் போது அது போலி நகை என தெரிந்தது. பின்னர் கடைக்காரர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் 2 பெண்கள் போலி நகைகளை கொடுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுபற்றி அவர் நவி மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதன்பேரில் மும்பை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நத்தினர். அதில், போலி நகைகளைக் கொடுத்தது, சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்த்த லட்சுமி (வயது 57) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரபேல் நவி மும்பை எஸ்.ஐ. பவார், போலீசார் சனாப், ஜோதி மந்ரே, மனிஷா கேதார் ஆகியோர் லட்சுமியை கைது செய்து சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 

பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மும்பை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.