ட்ரெண்டிங்

மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டு நிகழ்ச்சி!

சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜன.04) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நவீன முறையில் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களது வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றையதினம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலப் பள்ளி கல்லூரி விடுதிகளில் தங்கி 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பெறுவது குறித்தும், கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் பெறுவது குறித்தும், கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியிடங்களைத் தேர்வு செய்வது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் படிப்பதற்காக தினமும் இரு தமிழ் நாளிதழ்கள் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ் வழங்கப்படுகிறது. மேலும், அரசு மருத்துவரால் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. அதேபோன்று விடுதி மாணவ, மாணவிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களாக கேரம்போர்டு, செஸ்போர்டு, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, நீளம்தாண்டுதல், ஓட்டப்பந்தயம், எல்.இ.டி தொலைக்காட்சிப் பெட்டி, விடுதி அளவிலும் மற்றும் மாவட்ட அளவிலும் விடுதி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.

இன்றையதினம் முதற்கட்டமாக நடைபெற்ற வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியில் சேலம், மேட்டூர், போடிநாயக்கன்பட்டி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் உள்ள 9 அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதியில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் 211 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஆத்தூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

நவீன காலத்திற்கு ஏற்றவாறு தங்களுக்கான திறமைகளை மாணவ, மாணவிகள் வளர்த்துக்கொள்ளும்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எளிதாக பெற முடிகிறது. அரசால் வழங்கப்படுகின்ற இதுபோன்ற வழிகாட்டி நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் வெற்றியாளராக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில் அரசன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.