சேலம் பழைய சூரமங்கலத்தில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட செயல்பட்டு வருகிறது. பல வெற்றியாளர்கள், பல சாதனையாளர்களையும் இப்பள்ளி உருவாக்கியுள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு நிதி உதவிபெறும் பள்ளியாகவும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுயநிதி மேல்நிலைப்பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கென சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பு இருந்தது. இதில் 3.5 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் இருந்தது. நீர் ஆதாரத்திற்க்கான மூன்று கிணறுகளும், அந்த நிலத்தில் இருந்தது. பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனத்திற்கு பள்ளி நிர்வாகம் விற்பனை செய்துள்ளது. தற்போது அந்த விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
தற்போது அதே ரியல் எஸ்டேட் நிறுவனம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியையும் விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பு செய்யாமல் அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளியை இடித்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் முயற்சியில் பள்ளி நிர்வாகமும், ரியல் எஸ்டேட் நிறுவனமும் முயன்று வருகின்றது.
பள்ளி மூடப்படுவதாக வெளியான அறிவிப்பை அடுத்து கடந்த டிச.23- ஆம் தேதி அன்று சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் தலைமையில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியின் நுழைவுவாயில் முன்பு பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இந்த பள்ளியை மூட பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.26) புது ரோடு பேருந்து நிறுத்தம் அருகில் அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி முன்பு பேரணி நிறைவடைந்த நிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பள்ளி தொடர்ந்து செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


-SXgDfGgJfO.jpg)