ட்ரெண்டிங்

தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளைத் தேடி செல்ல வேண்டும்- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவுறுத்தல்! 

சேலம் மண்டல தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.23) கருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, சேலம் மண்டலத்தில் தான் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் அனைவரும் 92 சதவீதம் வருகை தந்துள்ளனர்.பொறுப்பு நிர்வாகிகளுக்கு கொடுத்துவிட்டால் அவர்களை பணிகளை செய்ய விட்டு விட வேண்டும், பின்னணி நின்று கொண்டு அவர்களை விமர்சனம் இருக்கக்கூடாது.

தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு நேரடியாக தெரியும் வகையில் செயல்பட வேண்டும். சமூக வலைதளங்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப  அணியின்  நிர்வாகிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.

வரலாற்றை திரித்து பேசுகிறார்கள்;மறைக்கிறார்கள்; வரலாற்றை தூக்கிப்பிடிப்பது தி.மு.க. மட்டும்தான். தி.மு.க.வை வளர்க்க வேண்டும் என்றால் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளை மதிக்க வேண்டும்; தி.மு.க.வின்  தகவல் தொழில்நுட்ப அணியினர் மூத்த முன்னோடிகளைத் தேடி செல்ல வேண்டும். அவர்களிடம் பேசி, அவர்களின் கருத்துக்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்..

தி.மு.க. பேசி பேசி வளர்த்த கூட்டம். இப்பொழுது மைக்கைப் பார்த்தால் ஓடுகிறார்கள். தகவல் தொழில்நுட்ப அணியினர் நிறைய பேசுங்கள்; பேச்சாளர்கள் நிறைய பேர் உருவாக வேண்டும். உண்மையான நிறைய கருத்துக்களை பேச, தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணியின் நம்மவர்கள் அதிகம் இருக்க வேண்டும். தி.மு.க. என்று நினைத்துக் கொண்டு பேசினால் வார்த்தைகள் எவ்வாறு வரும் என்று பாருங்கள்; பேசிக்கொண்டே இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.