ட்ரெண்டிங்

தலைமையாசிரியருக்கு பணியிட மாறுதல்....பெற்றோர்கள் போராட்டம்! 

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 110- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக அந்தோணி தாஸ் என்பவர் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் தலைமையாசிரியர் அந்தோணி தாஸை கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணி தாஸ் வந்த பிறகுதான் பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிப்பது உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இதே தலைமையாசிரியர் இந்தப் பள்ளியில் நீடிக்க வேண்டும் என்று என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தினர். 

அவ்வாறு மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றி விடுவோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.செட்டிச்சாவடி பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக ஏற்பட்டது.

போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்காது என்று கல்வி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் தலைமையாசிரியர் அந்தோணி தாஸ் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தை பெற்றோர்கள் கைவிட்டனர்.