ட்ரெண்டிங்

கைதிக்கு கஞ்சா...சரணடைந்த வழக்கறிஞர்! 

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கச்சா என்கிற அப்சல் என்ற தண்டனை கைதியை  சந்திக்க சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் கார் என்பவர் கடந்த வாரம் சேலம் மத்திய சிறைக்கு சென்றார். அப்போது வழக்கறிஞர் முருகன் கார் தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மற்றும் செல்போன் சிம் கார்டை கைதி கச்சா என்கிற அப்சலிடம் வழங்கினார்

இந்த நிகழ்வு அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இதனை கண்டுபிடித்த சேலம் மத்திய சிறை அதிகாரிகள் கஞ்சா மற்றும் செல்போன் சிம் கார்டை கைதியிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சேலம் மத்திய சிறை நிர்வாகம், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முருகன் கார் மற்றும் கைதி கச்சா என்கிற அப்சல், 2 தண்டனை கைதிகள் மீது புகார் கொடுத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கறிஞர் முருகன் கார்  இன்று (டிச.18) பிற்பகலில் சேலம் 3-வது நீதித்துறை நடுவர் முன் வழக்கறிஞர் முருகன் கார் சரணடைந்தார் .வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிபதி தங்க கார்த்திகா, 2 பேர்  ஜாமீன் பேரில் வழக்கறிஞர் முருகன் காருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.