ட்ரெண்டிங்

தரைப்பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம்! 

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை, கொல்லிமலை, கெங்கவல்லி உள்ளிட்டப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இடைவிடாது பெய்த மழையால் 3 ஆண்டுகளுக்கு பிறகு சுவேத நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதியில் உள்ள சுவேத நதியின் குறுக்கே அப்பகுதி பொதுமக்களின் பங்களிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வலசக்கல்பட்டி, மால்புள்ளி, நடுவூர், பச்சமலை, அக்கரை, உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு 3 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலன்கருதி சுவேத நதியின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர், இதனிடையே மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சுவேத நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும், ஆற்றில் துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை, குளிப்பாட்டவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என வருவாய்த்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்,