சேலம் மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வரும் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (நவ.14) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்புப் பணிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் விவசாய நிலம், அளவு, நிலத்தின் தன்மை, கடன் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்யும் வகையில், டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சேலம் வேளாண்மை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறையினர் மற்றும் வேளாண் கல்லுாரி மாணவர்களைக் கொண்டு இந்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள கிராப் சர்வே செயலியினை அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியின் மூலம் ஜி.பி.ஆர்.எஸ்., மேப் தெரிய வரும்.
இந்த மேப்பில் காட்டும் நிலங்களில் குழுவினர் சர்வே எடுப்பார்கள். கிராப் சர்வே அலைபேசி செயலியில் வரும் விண்ணப்பத்தில் விவசாயி பெயர், பரப்பளவு, எந்தவிதமான பயிர் நடவு செய்துள்ளார் என்பது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றை கணக்கெடுப்புப்பணியில் ஈடுபடுவோர் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் பிர்க்கா வாரியாக இ- அடங்கல் திட்டத்தில் சேர்ந்துவிடும். மாநில அளவில் இந்த அடங்கலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் 609 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர் விவரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நவ.09- ஆம் தேதி அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 12,48,318 உட்பிரிவுகளில் டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணிகள் துல்லியமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 3,22,438 உட்பிரிவுகளில் கணக்கெடுக்கும் பணிகள் முடிவுடைந்துள்ளன. இப்பணிகளில் 317 அரசு அலுவலர்கள் உட்பட 3 வேளாண்மைக் கல்லூரிகளைச் சேர்ந்த 1,004 மாணவர்கள் என மொத்தம் 1,321 பேர் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றையதினம் சேலம் மேற்கு வட்டம். மல்லமூப்பம்பட்டி, வட்ட முத்தாம்பட்டி, ஓமலூர் வட்டம், தெசவிலக்குவடக்கு, இடையப்பட்டி, வேடப்பட்டி. சிக்கம்பட்டி மற்றும் பெரியேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணிகள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணிகள் மூலம் அரசுக்கு விவசாயிகள் எத்தனை ஏக்கரில் எந்த விதமான பயிர்களை நடவு செய்துள்ளனர். குறிப்பாக, ஆண்டுதோறும் பயிரிடப்படும் நெல், கரும்பு, வாழை, காய்கறி, நிலக்கடலை, மரவள்ளி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அடுத்தகட்டமாக மக்களுக்கு தேவையான பயிர் வகைகள் குறித்து வேளாண்மை துறை ஆராய்ச்சி மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள் உடனிருந்தனர்.



-SXgDfGgJfO.jpg)