ட்ரெண்டிங்

77வது சுதந்திர தினத்தையொட்டி, சேலத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு!

77வது சுதந்திர தினத்தையொட்டி, சேலத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு!

77வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சேலத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சேலம் ஜங்சன் ரயில் நிலையம், சேலம் டவுன் ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், ஏற்காடு, மேட்டூர் சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக, சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் சேலம் வழியாக செல்லும் ரயில்களில் ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஜங்சன் ரயில் நிலையத்துக்கு வரும் வெளியூர் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மெட்டல் டிடெக்டர்களைக் கொண்டு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதேபோல், ஜங்சன் ரயில் நிலையத்தின் கார் பார்க்கிங், நடைமேடைப் பகுதிகள், பார்சல் அலுவலகம், ரயில்வே தண்டவாளம் ஆகிய இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வுச் செய்தும், சோதனை செய்தும் வருகின்றனர். 

சுதந்திர தின விழா நடைபெறும், சேலம் காந்தி ஸ்டேடியத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். நாளை (ஆகஸ்ட் 14) காலை 09.00 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடைப் போர்த்தி மரியாதைச் செலுத்துகிறார். 

பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகளையும் ஆட்சியர் வழங்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கிறது.