ட்ரெண்டிங்

துணை முதலமைச்சர் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானம்!

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் மாளிகையில் இன்று (நவ.14) சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம், கட்சியின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்,  தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை 
சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஏழை. எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும் சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும், அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகளை பொது மக்களிடையே எடுத்துரைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.