சேலம் மாநகரப் பகுதிகளிலுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக மாமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் நேற்று (நவ.11) மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் உயர்கல்வி கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு மாணவனுக்கும் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே உயர்கல்விக்குத்தேவையான கல்விக் கடன்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 153 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று மாவட்டத்தில் 47 வங்கிகள் மற்றும் இதன் 501 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு 2024- 25 ஆம் ஆண்டில் 7,000 நபர்களுக்கு ரூபாய் 99.00 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்விக்கடன் வழங்குவது குறித்து அனைத்து வங்கிகளின் கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
கல்விக்கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக இன்றையதினம் மாமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாணவ, மாணவியர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வித்யா லட்சுமி இணைய தளத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோன்று மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளிடம் கல்விக்கடன் வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாணவ, மாணவியர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு உரிய தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் அணுக வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படிப்பதற்கும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு
படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும். முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
கல்விக் கடன்களைப் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை, ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், வருமான சான்று நகல், கல்லூரி அடையாள அட்டை, வங்கிகணக்கு புத்தக நகல், கல்வி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்றிதழ், வித்யாலக்ஷ்மி, ஜன்சமார்த் இணையதளத்தில் பதிவு செய்திருந்தால், அதன் விண்ணப்ப நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களைக் கொண்டு கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும், மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிட மாவட்ட நிர்வாகம் எப்பொழுதும் தயாராக உள்ளது எனவும் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணைமேயர் சாரதா தேவி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், மண்டலக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள். வங்கியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)