ட்ரெண்டிங்

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கருத்தரங்கம்! 

சேலம் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (நவ.04) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 2022- ம் ஆண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியம் கைம்பெண்கள். கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி. சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழவைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் மணமாகாத மகளிர் ஆகியோரின் நலனுக்காக கருத்தரங்குகள் வாயிலாக நிதியினை முறையாக கையாளுதல் குறித்த கல்வியறிவு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் சொத்துரிமை, குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு மற்றும் இதர இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு இலவச சட்ட உதவி, புதிய நலத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் ஏனைய உதவிகள் ஆகியவை கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோருக்கு கிடைப்பதை இவ்வாரியம் உறுதி செய்கிறது. 

மேலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்றைய தினம் சமூகநலத்துறை வாயிலாக வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்குத் தேவைப்படும் சொத்துரிமை. குடும்ப வன்முறையிலிந்து உரிய பாதுகாப்பு, இலவச சட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் கருத்தாளர்களைக் கொண்டு இக்கருத்தரங்கின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆணையம் அனைத்து தொடர்புடைய துறைகளும் இக்கருத்தரங்கில் பெறப்படும் கருத்துக்கள் மற்றும் அரசின் திட்டங்கள் அனைத்தையும் அனைத்து கிராமங்கள் மற்றும் மாநகராட்சியின் அனைத்து ஊர்டுகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டு அவர்களது முன்னேற்றத்திற்கு பயனுடையதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் இக்கருத்தரங்கு வெற்றி பெற்றதாக கருத முடியும். 

அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்தார். இக்கருத்தரங்கில், மாவட்ட சமூக நல அலுவலர்  கார்த்திகா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுகந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீமுரளி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர் டாக்டர்.ரேணுகா, முதன்மைக் கல்வி அலுவலர் (ஓய்வு) சுமதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.