ட்ரெண்டிங்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (அக்.28) நடைபெற்றது. 

 

அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன்கள், மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 217 மனுக்கள் வரப்பெற்றன. 

 

மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 7 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று 2 நபர்களுக்கு தலா ரூபாய் 3.700 மதிப்பிலான காதொலிக் கருவிகள் மற்றும் ஒரு நபருக்கு ரூபாய் 1.100 மதிப்பிலான மடக்கு குச்சி என மொத்தம் ரூபாய் 8.500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சின்னுசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.