சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் இன்று (அக்.26) நடந்த மக்கள் சந்திப்புத் திட்ட முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இம்முகாமில், சேலம் மாநகராட்சி, வருவாய்த்துறை, வேளாண்மை, உழவர் நலத்துறை, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, மின்சாரத்துறை, நகரக் கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு கடன் சங்கம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் 90 பயனாளிகளுக்கு ரூபாய் 50.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இம்முகாமில், வேலைவாய்ப்பு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி மாலதியின் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் வகையில் பணி நியமன ஆணையும், சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அமுதா அவர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலியினையும் உடனடியாக வழங்கினார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் கால்பந்து போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


