ட்ரெண்டிங்

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் முன் மண்டபம் அமைக்க கோரிக்கை! 

சேலம் மாவட்டம், குரங்குசாவடி அடுத்து அமைந்துள்ளது அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயில். பிரசித்திப் பெற்ற இந்த திருக்கோயில், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டு செல்கின்றனர். 

அதேபோல், கோயில் வழியே செல்லும் லாரி ஓட்டுநர்களும் லாரியை நிறுத்தி இந்த கோயிலில் பூஜை செய்த பின்பே புறப்படுகின்றனர். இந்த நிலையில், பா.ம.க.வின் சேலம் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அருள், வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். 

பின்னர், கோயிலைச் சுற்றிப்பார்த்து எம்.எல்.ஏ., பக்தர்களின் வசதிக்காக கோயில் முன்பு மண்டபம் கட்டித்தரக்கோரி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையையொட்டி அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வாகனத்திற்கு பூஜை போடுவதும், நேர்த்திக்கடன்கள் செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், அந்த இடத்தில் வெயில் காலங்களிலும், மழைக்காலங்களிலும், பக்தர்கள் ஒதுங்கி நிற்பதற்கு இடம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

மேற்கண்ட இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத உயரமான முன் மண்டபம் கட்டுக்கொடுத்திட பக்தர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். எனவே மேற்கண்ட இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் முன் மண்டபம் கட்டிக்கொடுத்து உதவிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.