ட்ரெண்டிங்

சுதந்திர தினத்தன்று செயல்பட்ட 81 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு!

77-வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், அரசைச் சார்ந்துள்ள நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சுதந்திரத் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள தொழில்  நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா? என்று சேலம் தொழிலாளர் நலன் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையிலான அதிகாரிகள், நேற்று (ஆகஸ்ட் 15) சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் ஆய்வு நடத்தினர். 

குறிப்பாக, சேலம் மாநகரப் பகுதிகள், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர் ஆகிய இடங்களில் முன் அனுமதி  பெறாமலும் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் என மொத்தம் 118 கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், 81 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், அவர்களை வேலையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனங்களின் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைச் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்த சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, விடுமுறை நாட்களில் நிறுவனங்கள் இயங்க வேண்டுமெனில், அதற்கு தொழிலாளர் நலத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். அப்போது நிறுவனங்கள் விடுமுறை நாளில் இயங்குவதற்கான காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் விடுமுறை நாளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்த நாளுக்கான சம்பளத்தை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை சட்டம் கூறுகிறது.