சேலம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கென சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பூமாலை வணிக வளாகத்தின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திச் செய்யும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட அளவிலான முதன்மை விற்பனை வளாகமும், தேவையின் அடிப்படையில் கூடுதல் வணிக வளாகங்களும் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
இவ்வணிக வளாகங்களுக்கு பூமாலை வணிக வளாகம் எனப் பெயர் சூட்டி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மகளிரின் முன்னேற்றத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பூமாலை வணிக வளாகத்தினை ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து, பழுதுநீக்கம் செய்து, வண்ணம் பூசி தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 28- ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பூமாலை வணிக வளாகத்தில் மொத்தம் 18 வணிகக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் சேலம் மாவட்டத்தில் 20 வட்டார பகுதிகளிலுள்ள 385 ஊராட்சிகளிலும் கடந்த மூன்றாண்டுகளில் 4,063 சுய உதவிக்குழுக்களும், தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தில் சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகள் உட்பட மொத்தம் 38 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த மூன்றாண்டுகளில் 3,954 சுய உதவிக்குழுக்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நாளது தேதி வரை 13,392 சுய உதவிக்குழுக்கள் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் 7,568 சுய உதவிக்குழுக்கள் என மொத்தம் 20,960 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி கடன் இணைப்பாக 2021-2022-ம் ஆண்டில் 17,050 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 900.21 கோடியும், 2022-2023-ம் ஆண்டில் 17,968 குழுக்களுக்கு ரூபாய் 1,007.80 கோடியும், 2023-2024ம் ஆண்டில் 18,101 குழுக்களுக்கு ரூபாய் 1,151.20 கோடியும், நடப்பு 2024-2025ம் ஆண்டில் 14,822 குழுக்களுக்கு ரூபாய் 745.54 கோடியும் என சுழற்சி முறையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 67,941 சுய உதவிக்குழுக்கள் ரூபாய் 3,804.75 கோடி ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மூலம் வங்கி இணைப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.
மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை அறிந்து கொண்டு மகளிர் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டாம் தளம், அறை எண்: 207 இல், இயங்கும் மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)