ட்ரெண்டிங்

தவணை செலுத்தாததால் வங்கிக் கிளைக்கு அழைத்துச் சென்ற ஊழியர்! 

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தனியார் வங்கி ஊழியர், கூலித்தொழிலாளி ஒருவர் வாங்கிய கடனுக்காக, அவரது மனைவியை தனியார் வங்கிக்கு அழைத்துச் சென்று இரவு வரை தங்க வைத்து கணவரிடம் பணத்தை வசூல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் குடும்ப வறுமைக்காக 4 மாதங்களுக்கு முன்பு வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் 35,000 ரூபாய் கடன் பெற்றிருந்தார். 

வாரந்தோறும் ரூபாய் 770 வீதம் 52 வார தவணைகளில் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வண்ணம் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் 10 வார தவணை பாக்கி உள்ள நிலையில், பிரசாந்த் வீட்டிற்கு வந்த தனியார் வங்கியின் பெண் ஊழியர், வீட்டில் பிரசாந்த் இல்லாததால் அவரது மனைவி கௌரி சங்கரை தன்னுடன் வருமாறு கூறி வங்கி கிளைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

செல்போன் மூலம் தனது கணவருக்கு கௌரி தகவல் கொடுத்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தியிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில், நேரில் சென்ற காவல்துறையினர் அங்கு வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தினார். கடன் தவணைத்தொகை பணத்தைக் கட்டிவிட்டு மனைவியை அழைத்துச் செல்லுமாறு கூறியது பற்றி தெரியாது என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, காவல்துறையினர் முன்னிலையில் தவணை தொகையான ரூபாய் 770- ஐ செலுத்தி விட்டு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் வாழப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.