அக்.22- ல் சேலத்தில் கல்விக்கடன் மேளா!
சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கல்விக்கடன் மேளா வரும் அக்.22-ம் தேதி முதல் அக்.24-ம் தேதி வரை சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, உயர்கல்வி பயில்வதற்கான வங்கிக்கடனுதவியை எளிமையாவும், விரைவாகவும் பெறுவதற்கென மாவட்ட முன்னோடி வங்கியுடன் இணைந்து, சேலம் மாவட்ட நிருவாகம் கல்விக் கடன் மேளாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, ஓமலூர், தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய வட்டாரங்களில் கல்விக்கடன் மேளாக்கள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது.
இக்கல்விக்கடன் மேளாக்கள் 939 மாணவர்கள் கல்விக்கடனுக்கென பதிவு செய்து கொண்டதில், 34 மாணவர்களுக்கு விழா நடைபெற்ற இடத்திலேயே ரூபாய் 1.36 கோடிக்கான கடனுதவி பெறுவதற்கான ஒப்பளிப்புக்கடிதங்கள் வழங்கப்பட்டு பயனடைந்தனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கல்விக்கடன் மேளா 3 நாட்களுக்கு வரும் அக்.22 முதல் அக்.24 முடிய சேலம் மாநகரில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இம்மேளாவில் முதல் 2 நாள்களில், மாணவர்கள் மேளா நடத்தப்படும், கல்லூரி வளாகத்திலேயே தங்களைப் பதிவு செய்து கொள்ளவும், வித்யாலட்சுமி ஜன்சமாரத் இணையதளத்தில் தரவுப் பதிவேற்றம் செய்து கொள்ளவும் வசதிகள் செய்து தரப்படும். மூன்றாம் நாள் மற்றும் இறுதி நாளில் கல்விக் கடன் பெறுவது தொடர்பாக கலந்தாலோசிக்கவும், தக்க வழிகாட்டுதல் பெறவும் அனைத்து வங்கியாளர்களும் தயார் நிலையில் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2024-2025ம் நடப்பு நிதியாண்டில் 7,000 மாணவர்களுக்கு ரூபாய் 99 கோடியளவுக்கு கல்விக் கடன் வழங்கிட சேலம் மாவட்டத்திற்கு இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளவும், வித்யாலட்சுமி, ஜன்சமாரத் இணையதளத்தில் தரவுப் பதிவேற்றம் செய்துகொள்ளுமாறும், வங்கியாளர்களுடன் கலந்து ஆலோசனை பெற்று கல்விக்கடன் பெற்று பயனடைய வேண்டும்.
ஆதார் அட்டை நகல், பேன் அட்டை நகல், பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலை முறை பட்டதாரிச் சான்றிதழ், கவுன்சிலிங்கில் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரியின் கட்டண அட்டவணை மற்றும் போனஃபைட் சான்று மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இக்கல்விக்கடன் மேளாவில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தவறாமல் கொண்டு வர வேண்டும். அதேபோன்று, பெற்றோரின் ஆதார் அட்டை நகல், பேன் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் தவறாமல் கொண்டு வந்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


