ட்ரெண்டிங்

சிறுபான்மையினருக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் கலந்துரையாடல் கூட்டம், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருண் தலைமையில் இன்று (செப்.26) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியில் இந்தியாவிலேயே சிறுபான்மையின மக்களை சிறப்பாக வழிநடத்தும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் நியமித்தமைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


அதிலும் குறிப்பாக, மாநில சிறுபான்மையினர் ஆணையக் கலந்துரையாடல் கூட்டமானது இன்றையதினம் சேலம் மாவட்டத்தில் இருந்து துவங்குகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவினைச் சார்ந்த மதம் மற்றம் மொழிவாரியான சிறுபான்மையினர்களின் நலன்களைப் பேணி காத்திடவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் 1989-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. சிறுபான்மையின மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திடவும் சிறுபான்மையினர் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள்
நல வாரியத்தில் 400 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், 130 பயனாளிகளுக்கு
ரூபாய் 10.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்
திட்டத்தில் 291 பயனாளிகளுக்கு ரூபாய் 14.97 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளும், வக்ஃப்
நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க 9 பயனாளிகளுக்கு ரூபாய் 2.25 லட்சம் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.


2022-ஆம் ஆண்டு கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையினருக்கான மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்கள் 71 பயனாளிகளுக்கு ரூபாய் 4.10 லட்சம் மதிப்பிலும், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 682 பயனாளிகளுக்கு ரூபாய் 4.37 லட்சம் மதிப்பிலும் எண்ணற்ற அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள கிறித்துவ மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூபாய் 20 லட்சம் வரை இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது.


மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட தனி நபர் கடன், சிறு வணிகக் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 570 பயனாளிகளுக்கு ரூபாய் 5.57 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கிறித்துவ தேவாலயங்கள் புனரமைக்க தமிழ்நாடு அரசின் மூலம் நிதியுதவிகள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், கிறித்தவர்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத் தோட்டம் முஸ்லீம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறுபான்மையினர் மக்களுக்கான முழுமையான பாதுகாப்பையும், உரிமைகளையும் நிலைநாட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை ஜோ அருண் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில், சிறுபான்மையின மக்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல்
இயந்திரங்களும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், கிறித்துவ
தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய
உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் என மொத்தம் 215 பயனாளிகளுக்கு ரூபாய் 16.35
லட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர்
பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 5 பயனாளிகளுக்கு தொழில் கடனுதவியாக தலா
ரூபாய் 47,500 என ரூபாய் 2.38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 220
பயனாளிகளுக்கு ரூபாய் 18.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருண் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் சம்பத், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஹாமில்டன் வெல்சன், சுவர்ணராஜ், ராஜேந்திர பிரசாத், பிரவீன் குமார் டாட்டியா, நாகூர் ஏ.எச்.நஜிமுதின், முகமது ரஃபி, வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ.மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா,லோகநாயகி, துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதிபிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.