ட்ரெண்டிங்

சொட்டு நீர் பாசனம்- வேளாண்துறை அலுவலர்களுக்கு சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்!

 

வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முன்னோடித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (பிப்.09) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

 

 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்கள் அனைத்தும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் வேளாண்மைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

 

 

இக்கூட்டத்தில், உழவர் சந்தைகள். குளிர்பதன கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள். மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுக் கூடு அறுவடை விவரங்கள், விவசாயம் சார்ந்த கடன்கள், விவசாய மின் இணைப்புகள், விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் விநியோகம் மற்றும் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

குறிப்பாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பவர் டிரில்லர் மற்றும் வேளாண் இயந்திரங்கள் வழங்குதல், பண்ணைக் குட்டைகள், ஆழ்துளை கிணறுகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் அமைத்தல், நில மேம்பாட்டுத் திட்டம், சிறுபாசனத் திட்டம் போன்ற வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி அதிகபட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்றுப் பயனடையலாம்.

 

கோடை காலங்களில் சொட்டு நீர் பாசன அமைப்புகளை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மைத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் அரசால் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் முழுமையாக சென்றடைவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமெனவும், இவ்வாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.