ட்ரெண்டிங்

மூக்கனேரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! 

சேலம் மாநகராட்சி, மூக்கனேரியில் ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் இன்று (செப்.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய நீர்நிலைகளில் ரூபாய் 52 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் சேலம் மூக்கனேரியை ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூக்கனேரியானது சேலம் குமாரசாமிப்பட்டி, அய்யம்பெருமாள்பட்டி கிராமங்கள் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்தின் ஒரு பகுதியாகும். மூக்கனேரிக்கு ஏற்காடு மலைப் பகுதி, மலையடிவாரம் மற்றும் பெரிய ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது. மூக்கனேரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் அங்கிருந்து திருமணிமுத்தாறு ஆற்றில் கலக்கிறது.

இப்புனரமைப்பு பணிகள் மூலம் ஏரியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் மண், குடிநீர், நிலத்தடி நீர் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து, விவசாயம் உற்பத்தி பெருக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏரியில் நீரை சேமிப்பதன் மூலம் மீன்பிடி தொழில், படகு சவாரி மேற்கொள்ளவும், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்திடவும், கனமழையின் போது ஏரியில் மழைநீர் தேங்கி அதன் மூலம் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏரியில் தூர்வாரும் பணிகள். களை அகற்றுதல், தடுப்பணைகளின் உறுதிதன்மையை மேம்படுத்துதல், ஏரி சுவர் வலுப்படுத்துதல் மற்றும் கல் பதித்தல் போன்ற பணிகளும், ஏரியின் முகப்பு பகுதியில் நடைப்பயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், மரங்கள் நடுதல், இருக்கை வசதி மேற்கொள்ளுதல், கூடாரம் அமைத்தல், குழந்தைகள் விளையாடும் பகுதி, தியான பகுதி. குடிநீர் வசதிகள். கழிப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மூக்கனேரியில் ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைத்து அழகுபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தலைமையில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் (பொ) செந்தில்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் மூர்த்தி, சேலம் வருவாய் வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.