சேலம் மாவட்ட நிர்வாகத்தால் வரும் செப்.13- ஆம் தேதி அன்று மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம். காகாபாளையம் நாலேட்ஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
இக்கல்விக்கடன் மேளாவில் மகுடஞ்சாவடி வட்டாரத்தைச் சுற்றியுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஏற்கனவே வித்யாலஷ்மி மற்றும் ஜன்சமர்த் இணையதளங்களில் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல், மேலும் புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இம்முகாமானது நடத்தப்படுகிறது.
இம்முகாமில் 10- ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படிப்பதற்கும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் கல்விக் கடன் செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட கல்விக் கடன்களைப் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல், வருமான சான்று நகல். கல்லூரி அடையாள அட்டை, வங்கிகணக்கு புத்தக நகல், கல்வி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்றிதழ், வித்யாலஷ்மி, ஜன்சமார்த் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தால் அதன் விண்ணப்ப நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க ஏதுவாக கொண்டு வர வேண்டும். எனவே இக்கல்விக்கடன் மேளாவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


