சேலம் மாவட்டத்தில் கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று (செப்.15) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, அறிஞர் அண்ணாவின் 116 - வது பிறந்தநாளினை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் சேலம் மாவட்டத்தில் வரும் செப்.15- ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை மேச்சேரி பகுதியில் VGP மஹாலில் நடைபெறுகிறது.
மேற்கண்ட மருத்துவ முகாமில் இருதய நோய் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த அழுத்தம் போன்ற பொது மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பொதுசுகாதாரம், மகளிர் சுகாதாரம் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
எனவே, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் நெசவாளர்கள், நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் நெசவாளர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


