ட்ரெண்டிங்

அறிவுசார் மையத்திற்கு புத்தகங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்! 

சேலம் மாநகராட்சி அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அறிவுசார் மையத்திற்கு ரூபாய் 25,000 மதிப்பிலான 50- க்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகத்திற்கு இலவசமாக வழங்கினார்.

அப்போது மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, இந்த அறிவுசார் மையம் அரசு போட்டித் தேர்வுகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தமிழக அரசால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூபாய் 2.50 கோடி மதிப்பில் அமைந்துள்ளது. அரசு போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமல்லாது, தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தவும் இந்த மையம் மாணவ, மாணவிகளுக்கு உதவுகிறது.

மேலும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு சில எளிய வழிமுறைகளை அவ்வப்போது, உங்களுக்கு தெரிவிக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது உங்களை சந்தித்து, வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் தெரிவிக்கிறேன். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் நீங்கள் அணுக வேண்டும். அதில் வெற்றி பெற்றதில் வழிகளை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சில நபர்களை நானும் தொடர்பு கொண்டு அவர்களையும், இந்த மையத்திற்கு அழைத்து அவர்கள் வெற்றிக்கான வழிமுறைகளை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள், தமிழ்நாடு அரசு பொது சேவை ஆணையம் நடத்தும் தேர்வுகள், பணியாளர் தேர்வாணையம், பொறியியல் சேவை தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளில் சம்மந்தப்பட்ட தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்குரிய நூல்களை அவரவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுக்கேற்ற நூல்களை மட்டுமே படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் லட்சுமி, உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.