ட்ரெண்டிங்

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி! 


சேலம் சின்னத்திருப்பதி நகர கூட்டுறவுச் சங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம் ரூபாய் 47.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்களின் படி, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூபாய் 2,965 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொது நகைக்கடன் ரூபாய் 171.30 கோடியும், மகளிர் சுய உதவி குழு கடன் ரூபாய் 132.88 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் பெற்ற 1,03,986 பயனாளிகளுக்கு ரூபாய் 471.30 கோடியும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 51,903 மகளிர் பயன்பெற ரூபாய் 132.88 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,79,548 விவசாயிகளுக்கு ரூபாய் 2223.76 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை
கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூபாய் 15.20 கோடி வர்த்தகமும், சேலம் மாவட்டத்தில் உள்ள 19 கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீத தள்ளுபடியுடன் ரூபாய் 7.15 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று உரிய
கெடு தேதிக்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியினை அரசே
ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்துகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் 2,79,548 விவசாயிகளுக்கு 2,223.76 கோடி பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021-22 ஆம் ஆண்டு முதல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவைச் சார்ந்த இதர பணிகளுக்கு பராமரிப்புக் கடன் வழங்குவது உழவர் கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் கால்நடை வளர்ப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் வட்டி ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 61,926 விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிக்களுக்காக ரூபாய் 267.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூபாய் 12 லட்சத்திலிருந்து ரூபாய் 20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் 9128 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 473.84 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் 252 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூபாய் 1.12 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும் நிதி சுதந்திரத்தை வளர்க்கவும் 3,051 பயனாளிகளுக்கு ரூபாய் 14.91 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. உரிய கெடு தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. 796 பணிபுரியும் பெண்களுக்கு ரூபாய் 45.13 கோடியும் 641 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூபாய் 11.53 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் செயல்படும் 2 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் ரூபாய் 350.45 கோடி அளவிற்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ரூபாய் 3.81 கோடி அளவிற்குத் தானிய ஈட்டுக்கடன்களும் ரூபாய் 250.44 கோடி அளவிற்கு நகைக்கடன்களும் வழங்கியுள்ளன.

மேலும், சேலம் மாவட்டத்தில் செயல்படும் 8 பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூபாய் 177.58 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூபாய் 19.72 கோடி அளவிற்கு மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களால் ரூபாய் 73.29 கோடி அளவிற்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும், அவர்களுக்கான அதிக வருமானம் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும். சிறு வனப் பொருள்களின் விற்பனையை மேம்படுத்தவும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக 2023-24 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில், ஏற்காடு தாலுக்காவில் வாழவந்தியிலும், மேட்டூர் தாலுக்காவில் பாலமலையிலும், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் தும்பல்பட்டியிலும் புதிய பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு கடன் வழங்கும் பணியினை துவங்கி செயல்பட்டு வருகிறது.

காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் பனைவெல்லம் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் அக்டோபர் 2021 முதல் 31/03/2024 வரை ரூபாய் 5.82 லட்சம் மதிப்பிலான 1,725 கிலோ பனை வெல்லம் நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகளிடமிருந்து (FPOs) கொள்முதல் செய்யப்படும் கேழ்வரகு, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை மற்றும் வரகு ஆகிய சிறுதானியங்கள் ஜுன் 2022 முதல் 31/03/2024 வரை ரூபாய் 5.17 லட்சம் மதிப்பிலான 4635 கிலோ சிறுதானியங்கள் நியாய விலை கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் தொடர்ச்சியாக இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சேலம் சின்னத்திருப்பதி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடைபெற்ற நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம் 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 15.39,00,000 மதிப்பிலான கடனுதவியும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 50,000 மதிப்பிலான மாற்றுத்திறனாளி கடனுதவியும். மகளிர் தொழில் முனைவோர் கடனாக ரூபாய் 50,000-ம் கால்நடை வளர்ப்பு பராமரிப்பு கடனாக ரூபாய் 1,80,000-ம், வணிக கடனாக ரூபாய் 50,000/-ம், வீடு அடமான கடனாக ரூபாய் 5,00,000 என மொத்தம் மொத்தம் ரூபாய் 47.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.